Wednesday, February 22, 2017

Tiruvarur tyagaraja temple part4

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(4 )*
☘ *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*திருமண்டபங்கள்.*
தேவாசிரியம் சுந்தரரால் திருத்தொண்டத்தொகை இயற்றப்பட்ட இப்புனித மண்டபத்தின்  பெருமைகளைச் சேக்கிழார் நிருத்தொண்டர் மாக்கதையில் சிறப்பாகப் பேசியிருக்கிறார்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து  திகழும் இம்மண்டபத்தில் பிற்காலச் சோழர்களின் கலை வண்ணம் மிளிர்கின்றன.

மிகப்பெரிய மண்டபமான தேவா சிரியம் கருங்கற்பணியாகவே அமைந்துள்ளது. பீடம், உபபீடம், பத்மம், குமுதம், ஆகிய பகுதிகளுடன் திகழும் தளமும் எழிலழகு பொதிந்த தூண்களும் இம்மண்டபத்தின் சிறப்பு அம்சங்கள்.

சேவசமய வரலாற்றிலும் பல நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய இம்மண்டபம் கூத்தும், பரதமும் நிகழ்ந்த கலை அரங்கமாகவும் திகழ்ந்திருக்கிறது.

இவையன்றி இன்றும் தமிழகத்தின் சிறப்பான தொன்மை ஓவியக்கூடங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

*இராஜநாராயணன் திருமண்டபம்.*
ஆரூர் திருக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலேயே மிகத் தொன்மையான அழகுடன் திகழ்வது இராஜநாராயணன் மண்டபமாகும்.

இம்மண்டபமும் பிற்காலத் திருப்பணிகளுக்குட்பட்டஸபோதும் பெரும்பகுதி பழமையின் எச்சங்களே அணூக்கன் திருவாயிலுக்கு எதிராக அமைந்துள்ள இம்மண்டபம் கருங்கற்பணியாக, சிம்மத்தூண்கள் பெற்றுத் திகழ்கிறது. உத்திரத்தின் உள்விளிம்புகளில் நடனமாதர் தம் சிற்பங்களும் இடம் பெற்றுத் திகழ்கிறது.

கலை நயத்தால் சிறப்பிக்கப்படும் இம்மண்டபம் வரலாற்றுப் பெருமையும், சிறப்புமுடையதாகும். சோழப் பெருமன்னர்கள் காலத்தில் ஆரூர் ஊர்ச்சபையினர் கூடும் பொது மன்றமாகவும் இம்மண்டபம் திகழ்த்திருக்கின்றது.

பல்வேறு ஊர்ச் சபையினரும், நாட்டவரும் கூடி சமுதாய முடிவுகளை எடுத்த பெருமையும் இம்மண்டபத்தில் நிகழ்ந்திருக்கின்றது. இதை கல்வெட்டு மூலம் அறியலாம்.

பங்குனி உத்திரப் பெருவிழாக்கள் மட்டுமின்றி ஆதிரை விழாவின் போதும் ஆரூர் அண்ணல் எழுந்தருளும் சிறப்புடைய மண்டபமும் இதுவாகும்.

*இராஜேந்திர சோழன் திருமண்டபம்.*
கடாரம் வென்ற பெருமன்னனின் உள்ளம் கவர்ந்த நங்கை நல்லாள் பரவை நங்கையின் வேண்டுகோளுக்கிணங்கி, மாமன்னனின் மைந்தன் முதலாம் இராஜாதிராஜன் எடுத்த பெருமண்டபமாக இதனைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 

இது தற்போது சபாபதி மண்டபம் என்ற பெயரில் அழைக்கப்படும் மண்டபமாக இருக்கலாம் என ஊகம் கொள்ள இயலுகிறது. இம்மண்டபமும் பிற்காலத் திருப்பணிகளுக்கு இலக்கான ஒன்றே.

*சிற்பங்களின் செழுமை.*
கவையழகு மிளிரும் எண்ணிலாச் சிற்பங்களைச் சுமந்து நிற்கும் ஆரூர் திருக்கோயில் தமிழகச் சிற்ப வளமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டான திருக்கோயிலாகும்.

கல்லில் கவின்மிகு சிற்பங்களைத் தமிழகம் கண்ட முற் பொற்காலம் மகேந்திர பல்லவனின் காலமாகும்.

இப்பெரு மன்னனின் காலத்தில்தான் சோழ மண்டலம் பல்லவனின் ஆளுகையின் கீழ் இருந்தது . புறச்சமயம் விடுத்துச் சைவம் தழுவிய இவ்வேந்தன் காலத்திலும், இவனுக்குப் பின்னவர்கள் காலத்திலும் பல திருக்கோயில்களில் எழில்மிகு சிற்பங்கள் இடம் பெற்று விளங்கின.

இவை பல்லவ கலைநயம் எனக் குறிப்பிடும் தனித்தன்மை பெற்றுத் திகழ்ந்தன. இத்தகைய கலைநயம் கொண்ட சிற்பங்களாக ஆரூர் திருக்கோயிலில் அன்னையர் எழுவர் ( சப்த மாதர்கள்) கணபதி, மகேசன், துர்க்கை போன்ற சிற்பங்கள் இரண்டாம் திருச்சுற்றில் இடம் பெற்றுள்ளதைக் காணுங்கள்.

முதற் திருச்சுற்றில் உள்ள யமசண்டீசர் என்ற பெயரில் உள்ள சிற்பம் தென் திசைக்காப்புக் கடவுளான இமயன் என்பதும், இது பல்லவர்கள் காலப்பாங்குடையச் சிற்பம் என்பதும் சிற்ப இயல் வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாகும்.

மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை அழித்து அவனது தலைநகரைக் கைப்பற்றி வரலாற்றில் முத்திரை பதித்தவர் பரஞ்சோதி எனும் பல்லவர் தளபதி.

நரசிம்மப் பல்லவனின் சேனைத் தளபதியான இவர் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து வினாயகப் பெருமான் திருவுருவைக் கொண்டு வந்து சோழ நாட்டில் வைத்ததாக வரலாற்றுச் சிறப்பு உண்டு.

அவர் கொண்டு வந்த வினாயகர் அவரது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிட்டை செய்ததாகவும், அல்லது திருவாரூரில் வைத்ததாகவும் இரண்டுழிதக் கருத்துக்கள் இருந்து வருகின்றன.

செங்காட்டங்குடியில் *"வாதாபி வினாயகர்"* என்ற பெயரில் பிள்ளையார் குலோத்துங்கன் காலத்திய சிற்பமாகும்.

ஆனால் திருவாரூரில் முதல் திருச்சுற்றில் இடம்பெற்றுள்ள *வாதாபி வினாயகர்"* கலை அம்சத்தால் சாளுக்கிய கலை நெறியை முற்றிலும் ஒத்துத் திகழ்கிறது. 

சோழநாட்டில் பார்க்க இயலாத ஒருவகைப் புதுமைப் படைப்பு இச்சிற்பம். முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் இயற்றிய *வாதாபி கணபதிம்"* என்ற பாடல் இந்த மூர்த்திக்கு முன்புதான் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கன.

          திருச்சிற்றம்பலம்.

*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment