Thursday, October 19, 2017

Satchinathar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
_____________________________________
                   *118*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
______________________________________
*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
_______________________________________
*சாட்சி நாதர் கோவில், திருஅவளிவநல்லூர்.*
________________________________________
*இறைவன்:* சாட்சிநாதர், கம்பரிஷியுடையார்.

*இறைவி:* செளந்தர நாயகி, செளந்தர்யவல்லி.

*புராணப் பெயர்கள்:*
புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரி வனம், அவளிவள் நல்லூர்.

*தல விருட்சம்:* மாதிரி.

*தல தீர்த்தம்:* சந்திர தீர்த்தம். (சிவ புஷ்கரணி) கோயிலின் எதிரிலே அமையப் பெற்றிருக்கிறது 

*தேவாரம் பாடியவர்கள்:* 
திருநாவுக்கரசர்.
திருஞானசம்பந்தர்.
சுந்தரர்.

*இருப்பிடம்:*
கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.

கும்பகோணத்தில் இருந்து சுமார் இருபத்தொன்று  கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருஅரதைப் பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து மூன்றரை கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சாட்சி நாதர் திருக்கோயில்,
அவளிவநல்லூர்,
அரித்துவார மங்கலம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 612 802

*ஆலயத் திறப்பு காலம்:*
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூறாவது தலமாகப் போற்றப் படுகிறது.

தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பெற்ற தலங்கள் பல உண்டு. அவ்வரிசையில் இத்தலமும் ஒன்றாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்திருப்பது மிகச் சிறப்பு.

இந்த ஐந்து தலங்களை வரிசையாக......
 1. *திருக்கருகாவூர்* (முல்லைவனம்) -விடியற்கால வழிபாட்டிற்குரியது. 
2 *அவளிவநல்லூர்*
 (பாதிரி வனம்) - காலை வழிபாட்டிற்குரியது. 
3. *அரதைப் பெரும்பாழி* (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது. 
4. *ஆலங்குடி* (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது. 
5. *திருக்கொள்ளம்புதூர்* (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.

சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டார்கள்.

*கோவில் அமைப்பு:*
இவ்வாயத்திற்கு சென்றபோது,  இராஜகோபுரமில்லை என்பது தெரிந்து மனதில் எதையோ தொலைத்தமாதிரி இருந்தது நமக்கு.

ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் இருக்க,  உள்ளே நுழைந்தோம்.

வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருந்தது. சந்நிதி முன் நின்று மனமுருகப் பிராதித்து வணங்கிக் கொண்டோம்.

அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருளாட்சி தந்து கொண்டிருந்தாள். 

அம்பாளை வழிபட்டு வெளிவந்தோம்.  முகப்பில் விநாயகர் காட்சி தந்து கொண்டிருந்தார். விடுவோமா? படீரென, சடுதியில் அவர் முன்பு நின்று சரணடைந்து வணங்கிக் கொண்டோம். 

இவரை எப்போது எங்கு பார்த்தாலும், எத்தனை முறை பார்த்தாலும் விநாயகரை வணங்கிக் கொள்வதென்பது எனக்கு அலாதிபிரியம். ஆதலால் இந்த 'சடுதியில்....., 'படீரென......, வணங்குதல்.....

விநாயகரை வணங்கிய பின்பு, நேராக உள்புக, நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருளாட்சி காட்சி தந்தார்.

கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் இருக்க அவர்களை வணங்கிக் கொண்டு, ஈசனைக் காணும் அனுமதியை துவாரபாலகர்களிடம் வேண்டி, அதன்பின் உள் சென்றோம்.

கருவறை முன் பக்தர்கள் கூட்டம் குறைவாகக் இருக்க, சாட்சிநாத ஈசனை கண்குளிர பார்த்து வணங்கிக் கொண்டோம். அவருளை அள்ளி அள்ளி பருகிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு நெற்றிக்கு திரித்துக் தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றில் கூறியிருந்தபடி, ஈசன் சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவனும் பார்வதியும் காட்சியாய்த் தெரிந்த நிலை.... வெளியே வந்த பின்னும், நம் மனக்கண்ணில் நிழலாடிக் கொண்டிருந்தது.

உள்சுற்றில் வலம் செய்கையில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் இருக்கக்க கண்டோம்......

ஒவ்வொரு சந்நிதியாக தொடர்ச்சியாக வணங்கித் தொழுதபடியே நகர்ந்தோம்.

அடுத்ததாக நாம் காணப் பெற்றது, சோமாஸ்கந்தர் சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, ஆனந்தித்து ரசனைப்பாகுடன் மகிழ்ந்து நகர்ந்தோம்.

அடுத்து, நாம் கண்டது
நடராசர் சந்நிதியை. ஆடவல்லான் ஆடற்கலையுடன் தூக்கியத் திருவடிகளை உயர்த்திய கோலம், நம் உரோமக்கால்கள் சிலிர்த்திட, பக்திப்பாங்கால் நம்  கண்களில் அருவி உருகி பிறந்தது.

இந்தக் கண்ணீர் ஆனந்தமாய் வழிந்தது. அதில் உப்பு தெரியவில்லை. அப்படியே நம் தலையை அவன் காலடியில் கிடக்கத் தினித்துவிடலாம் போலிருந்தது.

அது முடியாதே? அதனால், அப்படியே ஒரு ஓராமாய் அமர்ந்து,  நடராஜப் பெருமானை பார்த்தபடி,  மணிவாசகரின் சிவபுரானம் முழுவதையும் ஓதிக் கொண்டோம்.

வலத்தில், அடுத்ததாக குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகளைக் கண்டு கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

இதனின் எதிராக நவக்கிரக சந்நிதிகள் இருந்தது. 

அடுத்து, கால பைரவர், சூரியன் சந்நிதிகள் முன் வந்து விழுந்தெழுந்து வணங்கிக் கொண்டோம். 

கோஷ்டத்தில் வலம் செல்கையில், கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர்களை பயபவ்யத்துடன் வணங்கி நகர..........

எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதியில் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

எங்களுக்கு முன் சென்ற ஒரு பக்தர் சண்டேசுரர் முன் கைதட்டி வணங்கினார்.

அடுத்து கைதட்டிவிடாதிருக்க, சட்டென அவர் கையை பிடித்து நிறுத்தி. அவரிடம்.........

சண்டேசுரர் எப்போதும் தியாணத்திலேதான் இருப்பார். நீங்கள் கைதட்டி ஓசை செய்வது, ஆடைநூலை பிய்த்துப் போட்டு வணங்கு முறை  தவறானது என சுட்டிக் காட்டினோம்.

உங்களுக்கு யாரோ தெரியாமல் சொல்லிக் கொடுத்திருக்கலாம்,, அல்லது அடுத்தவர் செய்ததைப் பார்த்து நீங்களும் இவ்வாறு செய்திருக்கலாம். இனி இவ்வாறு செய்யாதீர்கள் எனச் சொல்லி,..... 

இவர் தியாணம் கலையாமல் இப்படித்தான் வணங்க வேண்டும் என்று வணங்கும் முறையை அவருக்குப் விளக்கிச் சொல்லிக் கொடுத்து அதன்படியே வணங்கச் செய்தோம். 

அவரும், இவ்வளவு நாளும்  தெரியாமல் செய்து வந்திருக்கிறேன். வணங்குதல் முறையைத் தெரிந்நது கொண்ட நான், இவ்வணக்க முறையை ஒழுங்காகக் கடைபிடிப்பேன் என்று கூறி நன்றி தெரிவிவித்துச் சென்றார்.

*தல அருமை:*
*நல்லூர்* எனவும், அவ்வையாரால் *பனை பழுத்த நல்லூர்* எனவும் வழங்கப்பட்ட திருத்தலம் *'அவள் இவள் நல்லூர்'* ஆகும்.

இந்தத் திருத்தலத்தில் சிவதொண்டையே பிறவிப் பயனாகக் கருதி செய்து வந்தார் சிவாச்சாரியார் ஒருவர்.

அவருக்கு இல்லறத்தின் பயனாய் இரண்டு மகள்கள் வாய்க்கப் பெற்றனர்.

மூத்தவள் பெயர் சுசீலை; இளையவள் பெயர் விசாலாட்சி. 

இந்த காலகட்டத்தில் பழையாறையை ஆண்ட சோழ மன்னனின் அவைக்களப் புலவராக காசிபர் என்பவர் இருந்தார்.

அவரது மகனான விஷ்ணுசருமருக்கு, மூத்தபெண்  சுசீலையை மணம் முடித்துக் கொடுத்து விட்டனர்.

இதன்பின் சிலகாலம் இனிமையாக இல்லறம் நடத்தினார் விஷ்ணுசருமர்.

பின்னர் சுசீலையை அவளது பிறந்த வீட்டில் விட்டு விட்டு, சிவ தலங்களை தரிசிப்பதற்காக தல யாத்திரை புறப்பட்டுச் சென்றார். 

அந்தச் சமயத்தில் இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

தல யாத்திரை முடித்து திரும்பிய விஷ்ணுசருமன், மனைவியை பார்க்கும் ஆவலில் சிவாச்சாரியாரின் இல்லத்திற்கு விரைந்து சென்றான்.

அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது.

விஷ்ணு சருமர் சிவதல யாத்திரை சென்றிருந்த காலத்தில், அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள் சுசீலை. 

இந்த நோயின் காரணமாக அவளது உடல் முழுவதும் அம்மைத் தழும்புகள் ஏற்பட்டுக் காணப்பட்டன. மேலும் கண்கள் பார்வை அழிந்து குருடாகிப் போயிருந்தாள். இருந்த அழகும், இளமையையும் ஒழந்து காணப்பட்டாள்.

இதனால் விஷ்ணு சருமரின் மனம், சுசீலையை பார்க்கவும்  ஏற்கவும் மறுத்தது. 

அந்த சமயத்தில் சுசீலையின் தங்கையான விசாலாட்சி நன்றாக வளர்ந்து, முன்பிருந்த தனது அக்காளின் அழகையொத்தது போலவே, அழகும், இளமையும் கொண்ட தோன்றத்துடன் காணப்பட்டாள். 

அவளைப் பார்த்ததும் *'இவள்தான் என்னுடைய மனைவி சுசீலை.* அழகற்று இருக்கும் *அவள் யாரோ எனக்குத் தெரியாது'* என்று வாதிட்டான் விஷ்ணு சருமன். 

மேலும் எப்படியும் தன்னுடன் விசாலாட்சியை கூட்டிக் கொண்டு போய்விடும் முனைப்பில் இருந்தான் விஷ்ணுசருமன்.

இதனைப் பார்த்த சிவாச்சாரியார் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தார். மனம் பதைபதைத்தார். 

தான் அன்றாடம் வழிபடும் இறைவனின் முன்பு சென்று, இதற்கு ஒரு வழியைக் காட்டாவிட்டால் உன்னுடைய சன்னிதியிலேயே என்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வேன்' என்று கூறி கதறி கதறி அழுதார்.

அன்றைய இரவு சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய இறைவன், *'நாளை அனைவரையும் அழைத்துக் கொண்டு என் ஆலயம் வந்து சேர்'* என்று கூறி மறைந்தார்.

இறைவனின் வாக்கை நிறைவேற்ற எண்ணிய சிவாச்சாரியார், தனது மகள் மற்றும் மருமகனுடன் இந்தத் திருத்தலத்திற்கு விரைந்து வந்தார். 

அப்போது முனிவர் வேடத்தில் அங்கு வந்து சேர்ந்தார் சிவபெருமான். 

முனிவர் வேடத்தில் இருந்த ஈசன், அனைவரையும் கோவிலின் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தக் குளத்தில் மூழ்கி எழும்படி கூறினார்.

அனைவரும் அவ்வாறே செய்தனர். மூழ்கி எழுந்தபோது, அனைவரும் வியக்கும் வகையில் அழகற்று போய் இருந்த சுசீலை, தன்னுடைய திருமணத்தின்போது இருந்த அதே அழகிய தோற்றப் பொலிவைப் பெற்று கண் ஒளியும் பெற்று காட்சியளித்தாள்.

முனிவர் வேடத்துடனிருந்த ஈசன், மனந் தடுமாற்றத்திலிருந்த மருமகனைப் பார்த்து, *இவளே மூத்தவள் அவளே இவள்* என சுட்டிக் காட்டி மறைந்தார்.

*அவள் இவள்* என்று சாட்சி கூறியதால், இத்தல இறைவன் *சாட்சிநாதர்* என பெயர் கொண்டார்.

இத்தலத்தின் *நல்லூர்* என்ற பெயரும் மாறி *அவளிவநல்லூர்* என்றாயிற்று.

           திருச்சிற்றம்பலம்.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளை *திருப்பரிதிநியமம், பரிதியப்பர் கோவில்.* வ(ள)ரும்.
_____________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment