Thursday, October 19, 2017

Tat- tvam - asi - Explanations in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

தத் தவம் அஸி விளக்கம் -2

2.ஆறுகள் சமுத்திரத்தை அடையும் முன் தனித் தனிப் பெயர்கள் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால் கடலில் கலந்ததும் அவைகளின் தனித் தன்மை போய் விடுகிறது. கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி எல்லாமே உப்புக்கடலாக மாறிவிடுகிறது. ஆயினும் அவை ஆவியாகி மறுபடி பூமியில் மழையாக சேரும்போது அவைகள் மறுபடி தனித் தனி உருவம் பெறுகின்றன. அதே போல ஜீவராசிகள் பிரம்மத்தில் ஒடுங்கும்போது தனித் தன்மையை இழந்தாலும் மறுபடி ஸ்ருஷ்டியின்போது பழைய நிலையை அடைகின்றன.

3. இந்த மரம் உயிருள்ளவரை தண்ணீர் குடித்து வாழ்கிறது. வேரில் உறிஞ்சிய தண்ணீர் மரத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கிறது. ஆனால் அதன் ஒரு கிளையை ஒடித்துவிட்டால் அந்த ஒடிக்கப்பட்ட கிளையானது வாடி விடுகிறது. அதாவது அந்தக் கிளையிலிருந்து ஜீவன் போய்விட்டது. மரம் முழுவதுமே வெட்டப்பட்டால் அது மறுபடி துளிர்ப்பதில்லை.

அதே போல இந்த உடலில் ஆத்மாவானது இருக்கும் வரை உடல் உயிருடன் இருக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் உடல் உயிரற்றதாகிறது. ஆனால் ஆத்மா அழிவதில்லை.

ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது எது உறங்குவதில்லையோ அதுதான் ஆத்மா. அதன் அந்தராத்மாவாக இருப்பது பிரம்மம். அதுவே இந்த பிரபஞ்சத்தின் அந்தராத்மாவாக உள்ளது.

ஆனால் ச்வேத்கேதுவின் கேள்வி இதல்ல. ஸத் அல்லது பிரம்மம் எல்லாவற்றிற்கும் அந்தர்யாமி சர்வவ்யாபி என்பதை உணர்ந்தாலும் எப்படி அது உலகமாக நாமரூப வடிவில் தோன்றுகிறது என்பதுதான் அவன் சந்தேகம். அதை மேலும் சில உதாரணங்கள் மூலம் விளக்குகிறார்

4. ஒரு ஆலம்பழத்தை எடுத்து அதைப் பிளந்தால் சிறிய விதைகளைப் பார்க்கிறோம். அதில் ஒரு விதையை எடுத்துப் பிளந்தால் உள்ளே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. தந்தை கூறினார். இந்த வெற்றிடம் போல் காணப்படுவதில் இருந்துதான் இந்த பெரிய மரம் வளர்கிறது. அதேபோல உருவம் இல்லாத பிரம்மத்தில் இருந்துதான் இந்த பிரபஞ்சம் ஸ்தூல உருவில் தோன்றுகிறது,

5. ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு கரண்டி உப்பைப் போட்டால் அது கரைந்து விடுகிறது. அதில் உப்பு எங்கே என்று கண்டுபிடிக்க முடியுமா? அது எங்கும் பரவி உள்ளது, அதை உணரலாமே தவிர பார்க்க முடியாது. அதுபோல் பிரம்மம் எங்கும் பரவியுள்ளதானாலும் அதைக் காண இயலாது. ஏனென்றால் அது சர்வாந்தர்யாமியாக பிரபஞ்சத்தில் இருந்து பிரிக்கமுடியாததாடாக உள்ளது. ஆனால் எவ்வாறு தண்ணீரில் கரைந்த உப்பைக் காண முடியாவிட்டாலும் அதை சாப்பிட்டால் உணரமுடியுமோ அதைப் போல பிரம்மத்தை வேறுவிதமாக அறிய முடியும். எப்படி என்பதை இன்னும் சில உதாரணங்களுடன் விளக்குகிறார்

No comments:

Post a Comment