Thursday, January 18, 2018

Valudayanathar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு கருப்பசாமி.*
________________________________________
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல...................)
__________________________________________
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 210*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*வலிதாய நாதர் திருக்கோவில், திருவலிதாயம்.(சென்னை)*
_________________________________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபதாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:*
 வலிதாய நாதர், வல்லீஸ்வரர்.

*இறைவி:* ஜகதாம்பாள், தாயம்மை.

*தல விருட்சம்:* பாதிரி மரம், கொன்றை.

*தல தீர்த்தம்:* பரத்வாஜ் தீர்த்தம்.

*ஆகமம்:* காமீகம்.

*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

*தேவாரம் பாடியவர்கள்:*
திருஞானசம்பந்தர்.

*இருப்பிடம்:*
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கி.மி. தொலைவில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்,
பாடி,
சென்னை,
PIN - 600 050

*ஆலயப் பூஜை காலம்:*
தினமும் காலை 7.00 மணி முதல் 12.00  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது.

சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்.

*பெயர்க்காரணம்:*
பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

*கோவில் அமைப்பு:*
மூன்று நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரமாக இருக்க, இதனுள் *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டு உள் புகுந்தோம்.

கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் காணக்கிடைத்தது.

அவ்விடத்தில் கொடிமரத்தைப் பார்த்ததும், நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்து, சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே நந்தியார் இருந்தார். முதலில் இவரை வணங்கிக் கொண்டோம்.

பின்பு, ஈசனைத் தரிசிக்க உள் புக அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

வலது புறத்தில் இருந்த குரு பகவான் தனி சந்நிதி கொண்டு அருளிக் கொண்டிருந்தார். 

இவர் அருளைத் தரும்போது நாம் விடவேண்டும்? பவ்யபயத்துடன் கூனிக்குறுகி பல் பணிந்து வணங்கிக் கொண்டு, நலமருளை தருவாயாக! என விடுப்பு விடுத்து திரும்பினோம்.

குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்று என இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது கொண்டோம்.

குரு பகவானுக்கு தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்கவதற்காக, அவரே இத்தலத்திற்கு வந்து  தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு என்று குருக்கள் கூறினார்.

வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது.

மூலவர் வாயிலில் தரிசனக் கூட்டம் இல்லாதிருந்தது. மெல்லிய சப்தம்கூட இல்லாது மிக அமைதியான சூழல் இருந்தது.

அப்படியே ஈசன் முன் வந்து தியாணித்தபடி நின்றோம். பின் தீபாராதனை ஜோதியில் ஈசனை கண் கைகள் உயர்த்தி குவித்து வணங்கி விட்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு திரித்துத் தரித்துக் கொண்டு வெளிவந்தோம்.

வெளிவந்தபின் சுவாமி சந்நிதியின் கருவறை அன்னாந்து நோக்க, யானையின் பின்புறத்தை ஒத்த கஜப்பிரஷ்டை அமைப்புடன் விமானம் அமையப் பெற்றிருந்தது.

சிரமேற் கைகள்குவித்து தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

உள் பிரகாரத்தின் வலது புறம் சென்றோம். அங்கு தெற்கு நோக்கியபடி அம்பாள் தாயம்மை சந்நிதி அமைந்திருந்தது.

இங்கேயும் அம்மை முன்பு, கண்களை மூடி தியாணித்தோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். விளக்கு ஜோதி ஆராத்தியில் அம்மையை வணங்கிக் கொண்டோம்.

அர்ச்சகர் தந்த குங்குமப் பிரசாதத்தை பெற்றுக் கொண்டதும், நெற்றிக்கு இட்டதுபோக, மதிப்புயர்ந்த மீதக்குங்குமத்தை மனையாளிடம் அளித்துக் கொண்டு வெளிவநாதோம்.

அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு இருந்தது.

ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் இருந்தது.

குருக்களிடம் இதுபற்றிக் கேட்டோம். ஏஅதற்கு குருக்கள்...........

அம்பாள் உருவம் ஒரு காலத்தில் பின்னப்பட, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னமான மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்து விட்டதாக சொன்னார்.

உள் பிரகாரத்தில் விநாயகரைக் கண்டு விட்டோம்!, விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

அடுத்து, சூரியன், நான்கு கரங்களுடன் பாலசுப்ரமனியரும், மற்றும் தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்க ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பதைத்தான் எல்லோரும் பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு லிங்கோத்பவர்க்கு பதிலாக மகாவிஷ்ணு காணப்படுகிறார்.

மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார் என்று அருகிருந்தோர் கூறினார்கள்.

அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளதால்தான் இங்கு மகாவிஷ்ணு இருக்கிறார்.

மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் இருந்தன.

ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று, நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் ஒவ்வொருத்தரையும்  வணங்கியபடியே நகர்ந்தோம்.

பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் இருந்தது. கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி காட்சியருளினார். பணிந்து வணங்கித் திரும்பினோம்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளதென தெரிந்து கொண்டோம்.

மேலும் ஆலயத்தை பரவலாக நோக்கி வரும்போது, கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களைச் செதுக்கப்பட்டிருந்தன.

*பாரத்வாஜ தீர்த்தம்:*
ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி உருவம் பெற நேர்ந்தது.

சாபம் நீங்கப் பெற்றார் அவர் (கருங்குருவி) திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார்.

நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறானது அவரால் உருவாக்கப்பட்ட *பாரத்வாஜ தீர்த்தம்* என்று அழைக்கப்படுகிறது.

பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது என்பர்.

பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது.

விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும்.

ஆனால், நல்ல வரன் அமைய வியாழக் கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

*தல சிறப்பு:*
இக்கோவிலில் குரு பகவான் தவம் புரிந்து காமத்தீயை வென்றவராவார்.

அதனால் சென்னையில் உள்ள ஓர் குரு தலமாகவும் திகழ்கிறது.

திருமால், அனுமன், சுக்ரீவன், ராமபிரான், லவகுசலர் முதலியோர் இறைவனை வழிபட்டு பேறு பெற்ற தலம் இது.

அகத்திய முனிவர் வில்வலன், வாதாபி ஆகியோரை கொன்ற பாவம் நீங்க இத்தலத்தப் பெருமானை வழிபட்டு பேறு பெற்ற தலமும் இது.

*தல பெருமை:*
திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது.

வியாழ பகவானின் மகன்களாக பரத்வாஜர், கரிக்குருவி என்கிற வலியன் ஆகியோர் பிள்ளைகளாக பிறந்தார்கள்.

பரத்வாஜர் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தம் அடைந்து, பல புண்ணிய தலங்களுக்கு சென்று சிவனை வணங்கி வந்தார்.

அவர் இங்கு வந்த போது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார்.

லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், சாப விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார்.

இதனால் இத்தலத்தில் புறாக்கள் அதிகம் காணப்பெறலாம்.

எனவே தான், இத்தலம் *"திருவலிதாயம்"*என்றும் சிவன் *"வலியநாதர்"* என்றும் அழைக்கப்படுகிறார்.

பிரம்மன் தவப்புதல்வியரான கமலை, வள்ளி என்னும் இருவரையும் விநாயகப்பெருமான் இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டதாக புராணம் கூறுகின்றது.

*வழிபட்டோர்:*
அகஸ்தியர், பரத்வாஜ முனிவர், வலியன், குரு பகவான், சூரியன், சந்திரன், இமயன், அக்கினி ஸ்ரீராமர் அனுமன் ஆகியோர் வழிபட்ட தலம் இது.

*வித்தியாச கோணம்:*
பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் சிவன் சன்னதி தனியாகவும் , அம்பாள் சன்னதி வேறொரு இடத்தில் தனியாகவும் தான் இருப்பது மரபு, அமைப்பு.

ஆனால், சிவனையும் , அம்பாளையும் ஒரே மூலஸ்தானத்தில் வைத்து ஒருசேர நம்மால் எங்கும் காண முடியாது.

ஆனால் திருவலிதாயம் இதற்கு விதி விலக்கானவை.

ஈஸ்வரன் சன்னதிக்குள் அம்பாளும் இடம் பெற்றிருக்கிறாள். 
அதனால் நாம் இருவரையும் மூலஸ்தானத்தில் வைத்து ஒரு சேர தரிசித்து ஆனந்திக்கலாம்.

(இதுக்கு காரணக் குறிப்பு மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.)

இத்தலத்தில் அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் மேற்கூரையில் அஷ்ட லட்ஷிமியும் , அஷ்ட திக்குப் பாலர்களும் பொறிக்கப் பட்டுள்ளனர் என்பது மற்றொரு சிறப்பு வாய்ந்தவையாகும்.

ஈசன் சன்னதியின் மூலஸ்தானம் அரை வட்ட வடிவமாக விளங்குவதால் இங்கு பிரதோஷம் மிகவும் விசேஷம்.

ஈசன் சன்னதிக்கு எதிரே வெளியில் செல்லும் வாயில்களின் இருபுறமும் சூரிய சந்திரர்கள் பொறிக்கப் பட்டிருப்பர்கள் இது நியதி.

ஆனால் இங்கு சந்திரனுக்குப் பதிலாக விநாயகர் எழுந்தருளியுள்ளார் என்பது கவனிக்க வேண்டியவை.

மேலும் இங்கு அனுமன் தீர்த்தம் , பரத்வாஜ தீர்த்தம் உள்ளிட்ட மொத்தம் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன என்கின்றனர் இங்கிருப்போர் சிலர்.

இக்கோயிலின் தல வரலாறு பற்றி கோயிலின் தலமை குருக்களிடம் கேட்டோம்.

அவர் மிகுந்த உற்சாகத்தோடும் பக்திப் பெருக்கோடும் சொன்னார்.

கருக்குருவியின் (வலியன் குருவி) வயிற்றில் தோன்றிய பரத்வாஜர் என்ற முனிவர் ஒரு சமயம் மேனகையின் சாபத்துக்கு ஆளாகிறார்.

அந்தச் சாபம் நீங்கவும் , குருவி வயிற்றில் பிறந்தவன் என்று மற்றவர்கள் கேவலமாகப் பேசுவதைத் தடுக்கவும் இக்கோயிலில் உள்ள தல விருட்சமான சரக் கொன்றை மரத்தின் கீழிருந்து சிவ பெருமானை பூஜித்து வழிபட்டு வர சாப விமோசனம் அடைத்தார் என இக்கோயில் வரலாறு கூறுகிறது என்றார் அவர்.

மேலும் கூறுகையில் கல்வி கேள்விகளில் சிறந்தவர் உதத்திய முனிவர்.

அவரது மனைவி அழகே உருவான மமதை என்பவள்.

அவள் கருவுற்றிருக்கும் சமயம் உதத்திய முனிவரின் இளைய சகோதரனான வியாழ முனிவர் , மமதையின் அழகில் மயங்கி தகாத முறையில் நடந்து கொள்ள முய்ற்சி செய்ய அவளின் சாபத்துக்கு ஆளாகிறார்.

அந்த சாபத்தினால் மிகவும் அல்லலுற்ற வியாழ முனிவருக்கு ரிஷி மார்க்கண்டேயர் சாப விமோசனத்திற்கான வழியைக் கூறுகிறார்.

அதன் படி வியாழ முனிவரும் ஈசனைக் குறித்து தவமியற்ற இரத்தின வனமான திருமுல்லைவாயிலுக்கும் , வேல வனமான திருவேற்காட்டிற்கும் இடையே உள்ள விருத்த ஷீர நதி தீரத்தில் உள்ள வலிதாயம் என்ற இந்தத் திருத்தலத்திற்கு வந்து கடுந்தவம் புரிந்து சாப விமோசனம் பெற்றார்.

*மற்றொரு சாப விமோசன வரலாற்றையும் விளக்கமாகக் கூறினார்.*

இத்திருத்தலத்தில் சாப விமோசனம் பெற்றவர்களின் பட்டியல் அகத்தியர் , சந்திரன் , யமன் , அக்னி , ராமர் , அனுமான் ,லவகுசர்கள் , மன்மதன் , இந்திரன் திருமால் என நீளுகிறது.

இது வியாழ பகவான் சாப விமோசனம் பெற்ற தலமாதலால் இது குருஸ்தலமாகவும் விளங்குகிறது.

இங்கு குருவுக்கென்று தனி சன்னதி ஒன்றும் சமீபத்தில் கட்டப் பட்டுள்ளது.

மேலும் இத்திருத்தலத்தில் எழுந்தளியுள்ள எம்பெருமானுக்கு திருவல்லீஸ்வரர் எனப் பெயர் வந்த காரணத்தையும் விளக்கினார் குருக்கள்.

ஒரு முறை பிரம்மாவின் புதல்விகளான கமலை , வல்லி என்பவர்கள் சிவனையே மணாளனாக அடைய நினைத்து தவமியற்றினர்.

அதைத் தெரிந்து கொண்ட சிவ பிரான் தான் சக்திக்கு ஒரு பாதி உடலை அளித்து விட்டதால் அவர்களை மணக்க இயலாத நிலையில் உள்ளதாக எடுத்துக் கூறினார்.

இதில் உள்ள உண்மையை உணர்ந்த அவர்கள் சிவபெருமனைவிடப் புகழில் சற்றும் குறையாத அவரது மகனான விநாகரைத் திருமணம் செய்து கொண்ட இடமாதலால் இங்குள்ள ஈஸ்வரர் , திருவல்லீஸ்வரர் என அழைக்கப் படுகிறார் என்றும் தெரிவித்தார்.

திருஞான சம்பந்தர் மட்டுமல்ல , அருணகிரியார் தான் பாடிய திருப்புகழிலும் திருவலிதாயத்தில் குடி கொண்டுள்ள எம்பிரான் முருகனை, மருமல்லியார்... எனத் தொடங்கும் பாடலின் மூலம் வணங்கியுள்ளார்.

மேலும், கருணையின் மறு வடிவமாகத் திகழ்ந்த இராமலிங்க அடிகளார் , திருவருட்பாவில் இங்குள்ள ஈசனை.......

சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே
எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
தந்தையே வலிதாயத் தலைவ நீ
கந்தை சுற்றும் கணக்கது என் கொலோ!
எனக் கசிந்துருகுகிறார்.

மேலும் இவர் வலிதாய நாதன் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார்.

மிகவும் பழம் பெருமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் முதலில் வெறும் மரத்தடிக் கோயிலாகவும் , பின்னர் மரக் கோயிலாகவும் இருந்திருக்கிறது.

சோழர் காலத்தில் தான் கற்கோயில் கட்டப்பட்டது என்பதை இங்கேயுள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இங்கே முந்தைய காலங்களில் ஆயர் குலத்தவர் அதிகம் வசித்து வந்த்தால் பாடி என்னும் பெயர் பெற்றது என்கின்றனர்.

இது குடும்பத்தோடு செல்ல ஏற்ற இடம் இது.

அப்படிச் செல்லும் போது நம் குழந்தைகளுக்கு இக்கோயிலின் பழம் பெருமைகளையும் அதைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சொல்லிக் கொடுங்கள்.

இதனால் அவர்களுக்கு பக்தி மிகுவதோடு சமூகப் பொறுப்பின் மீதும் அக்கறை ஏற்படும்.

அனைவரும் திருவலிதாயம்(பாடி) ஒரு முறை சென்று வாருங்கள்.

திருவல்லீஸ்வரர் , ஸ்ரீ ஜகதாம்பிகை ஆகியோர் உங்களுக்கு அருளைப் பொழிவார்.

*பாடலின் மேன்மை:*
திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற புகழை உடையது இந்தத் திருத்தலம்.

பத்தரோடு ... எனத் தொடங்கி பத்து பாடல்கள் இயற்றியுள்ளார்.

இவ்வாறு பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பிற்கு தமிழ் இலக்கணம் இட்டிருக்கும் பெயர் தான் பதிகம்.

அவர் இறைவனை வலிதாய நாதர் எனவும் இறைவியை தாயம்மை எனவும்  பாடியிருக்கிறார்.

ஆனால் அர்ச்சனையில் இறைவனை திருவல்லீஸ்வர ஸ்வாமி என்றும் அம்பிகையை ஸ்ரீ ஜகதாம்பிகா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

*சம்பந்தர் தேவாரம்*
பண் :நட்டபாடை

1.🔔பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.

🙏🏾வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினைமுடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங்கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலகமக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

2.🔔படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.

🙏🏾படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையமாட்டா.

3.🔔ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.

🙏🏾வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிற மேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும் வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.

4.🔔ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்
புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.

🙏🏾அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.

5.🔔புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.

🙏🏾வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.

6.🔔ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.

🙏🏾வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக் காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும், சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலிதாயத்தைத்தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.

7.🔔கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.

🙏🏾வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுலகெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

8.🔔கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.

🙏🏾உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துயரம் கெடும் என வினை முடிபு காண்க . திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி , வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும் , மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் .

9.🔔பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.

🙏🏾வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும், திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத்தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.

10.🔔ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.

🙏🏾வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர் . மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர் . குற்றம் தீர , அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே , அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர் .

11.🔔வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.

🙏🏾வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.

இசையோடு பாடலைப் பாடமுடியாதோர் பாடலைப் பாடினாலும் இறைவன் ஏற்பவனாவான்.

          திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*
சித்திரையில் பிரமோற்சவம்,
தை கிருத்திகை,
குரு பெயர்ச்சி.

*தொடர்புக்கு:*
044- 26540706

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் நாளைய தலப்பதிவு *மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில்.*
__________________________________________
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

No comments:

Post a Comment