Thursday, January 18, 2018

Vedapureeswarar temple, thiruverkadu

 உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
கோவை கு.கருப்பசாமி.
______________
தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசித்ததைப் போல......................)
_______________
தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 212

பாடல் பெற்ற சிவ தல தொடர்:

சிவ தல அருமைகள் பெருமைகள்:

வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு:
________________
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் இருபத்து இரண்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

இறைவன்: வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்.

இந்த: பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை.

தல விருட்சம்: வெள்வேலமரம்.

தல தீர்த்தம்: வேத தீர்த்தம், பாதித்திருக்கிறது, வேலாயுத தீர்த்தம்.

ஆகமம்:

ஆலயப் பழமை:
ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.

தேவாரம் பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.

இருப்பிடம்:
சென்னை, பூவிருந்தமல்லி பிரதான சாலையில் சுமார் பதினேழு கி.மி. பயணம் செய்தால், வேலப்பன் சாவடி என்ற இடம் வரும்.

பிறகு இங்கிருந்து வலது புறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சென்றால் சுமார் மூன்று கி.மி. சென்றால் இந்த தலத்தை அடையலாம்.

சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன.

திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மி. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவேற்காடு அஞ்சல்,
திருவள்ளூர் மாவட்டம்.
PIN - 600 077

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு:
திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வருகிறது.

ஆனால் அதே திருவேற்காட்டில் பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரியாமலே இருந்து வருகிறார்கள்.

தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் ஒரு கி.மி தொலவில் உள்ள இந்த சிவாலயத்திற்குச் சென்று வர நல்ல சாலை வசதி இருக்கிறது.

நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்று விளங்குகிறது.

கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரத்தைக் காணப் பெற்றோம். இக்கோபுரம் ஐந்து நிலைகளைத் தாங்கி மிக அழகாக இருந்தது. சிவ சிவ, சிவ சிவ என மொழிந்து கோபுரத்தை தரிசித்துக் கொண்டோம்.

கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே துழைந்தோம். உள்ளே விசாலமான வெளிப் பிரகாரம் இருந்தது.

இவ்விடத்தில், கொடிமரத்தை முதலில் காணப் பெற்றதும், நெடுஞ்சான்கிடையாய் விழுந்து சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கியெழுந்து நிமிர்ந்தோம்.

அடுத்திருந்த பலிபீடத்தருகாக வந்து நின்று நம் ஆணவமலம் ஒழிய பிரார்த்தித்து வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

பின்பு நந்தி மண்டபத்தில் இருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஆலயத்துள் உள் புக அனுமதியும் அவரிடம் வேண்டிக் கொண்டு தொடர்ந்தோம்.

தொடர்ந்து செல்ல, இரண்டாவது வாயிலைக் கண்டு, இதனுள்ளே சென்றவுடன் நேர் எதிரே மூலவர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தோம்.

வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

முன் நின்று மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டோம்.

மூலவர் லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக இருப்பதைக் கண்டோம்.
சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆதலால் அந்தக் காட்சியே இங்கு கருவறைக்குள் அமைந்திருக்கிறது.

திருப்தியுடன் ஈசனை வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

ஆலய உட்பிரகாரத்தின் இடது புறத்தில் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

தெற்கு உட்பிரகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் கண்டு கூப்பிய கைகளுடன் ஒவ்வொருத்தரையும் தொடர்ச்சியாக வணங்கித் துதித்தோம்.

மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச் சிலைகள் இருக்க அனைவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.

அடுத்து, வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதிக்குச் சென்றோம்.

இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் இருந்தார். இவரை வணங்குதல் மரபு முறைப்படி வணங்கிக் கொண்டோம்.

மேலும், எம்மிடம் உள்ளதன, இல்லாதன என அனைத்தையும் உள்ளடக்கி, இவரின் தியாணம் நம் சத்தத்தில் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, மிகவும் மென்மையாக உள்ளங்கையினை விரித்தளித்துக் காட்டி வணங்கிவிட்டுத் திரும்பினோம். 

அடுத்து, கணபதியை கண்டு விட்டோம். விடுவோமா?, சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.

கோஷ்ட தெய்வங்களான தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது.

ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது.

அதன் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தந்தார். 

நம் கரங்கள் தன்னாலேயே சிரசின்மேல் உயர்ந்தன. மூர்க்க நாயனார், பொதுவாகவே ஈசன் மீது மூர்க்கமான பக்தியை செலுத்துபவர்.

வறுமையிலும் கலங்காது, தவறான மூர்க்க காரியங்களில் ஈடுபட்டு அடியார்களுக்கு அமுது செய்வித்து வந்தவர்.

தன்னிலையை எண்ணாது, தனக்கு கேடே நிகழினும், அடியார்களுக்கு திருவமுது செய்து கொடுக்கும் தொண்டிலே குறியாக ஒழிகிவந்தவர்.

முன்பு நாயன்மார்கள் சரிதம் பதிந்தபோது, அவர்கள் செய்த தொண்டின் பாங்கை அறிந்து, அழுகையை வரச் செய்த நாயன்மார்களில் இந்த மூர்க்க நாயனாரும் ஒருவராவார். சிவ சிவ.

அடுத்து, இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு, ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி காட்சி தந்தார். பவ்யபயத்துடன் வணங்கி நகர்ந்தோம்.

புராணச் செய்தி:
முருகப் பெருமானின் வாழ்க்கையோடு இத்தலம் சம்பந்தம் உடையதாயின.

பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை ஒரு முறை, முருகப் பெருமான் கைது செய்துவிட்டார்.

அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது.

சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார்.

ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை.

இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான், தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார் ஈசன்.

அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார்.

கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம்.

சொல்லுக்குக் கட்டுப்படாத முருகனுக்கு, தன்னை திருவேற்காடு வந்து தரிசிக்க வேண்டும் என்ற தணடனையின் தத்துவமே, இங்கு முருகனுக்கு முன்பாக லிங்கம் அமைந்திருக்கும் தத்துவம்.

இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம், என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது.

இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிறார்.

திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரண்டு பாடல்கள் உள்ளன.

இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.

இத்தலம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

இத்தலத்தில் பராசர முனிவர் இறைவனை வழிபட்டுள்ளார்.

இம்முனிவர் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் புலமை பெற்றவர்.

எனவே ஜோதிடம் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடத்தில் புலமை பெற விரும்பவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் ஆகியோர் இத்தல இறைவனை வழிபடுதல் நன்மை தரும் என்கின்றனர்.

மூர்க்க நாயானார்:
63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயானார் பிறந்து, வாழ்ந்த தலம் திருவேற்காடு.

இவர் சிவனடியார்களுக்கு உணவு கொடுத்து வரும் சிவத்தொண்டைத் செய்து வந்தார்.

நாளடைவில் இவரின் செல்வம் யாவும் இவரின் இந்த சிவத்தொண்டில் கரைந்துவிட, சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் செல்வத்தை சிவனடியார்களுக்கு உணவிட செலவு செய்து தனது திருத்தொண்டை தொடர்ந்து நடத்தினார்.

இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது.

மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது.

ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால். இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது.

தல சிறப்பு:
திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருவேற்காடு தலத்தில் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சிவாயத்தைச் சுற்றிலும்  எட்டு திசைகளிலும் எண் கயிலாயத் தலங்களாகப் புராண காலத்தின் பெருமைகளைக் கூறும்படி அமையப்பெற்றிருக்கின்றன.

வேதங்களே வேல மரங்களாக:
திருவேற்காடு என்ற பெயர் வரக் காரணமாக இருந்த வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் இறைவன் திருமணக் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி தர வேலமரங்களே வேதங்களாகச் சுற்றி நிற்பதால் இந்த புனித பூமிக்கு முன்பு வேற்காடு எனப் பெயர் இருந்துவந்தது.

ஒரு சமயம் அகத்திய மகாமுனிவர் இந்தத் தலம் வழியாகச் சென்றபோது இறைவனைப் பாடிவிட்டுப் புறப்படும் சமயம், இத்தலத்திலாவது தேவியுடன் காட்சிதர வேண்டும் என்று கேட்க, அவ்வாறே காட்சி தந்தோம் என்று உமையம்மையோடு தோன்றினார்.

வரலாற்று ஏடுகளில் சொன்னபடி சிவாலயத்தின் கருவறையின் இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

பார்வதியின் கேள்வி:
தவமுனிவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் மட்டும் கேட்ட உடனே காட்சி கொடுக்கும் சிவன், உலக ஜீவன்களுக்கு மட்டும் காட்சி அளிப்பதை தாமதப்படுத்துவது ஏன்? என்று உமாதேவியார் கேட்டார்.

அதற்கு சிவபெருமான், சொல்லுக்கு இலக்கணதாரியான அகத்தியனுக்கு ஒரு மேனியில் காட்சி தந்தோம்.

ஆனால், இந்தத் திருத்தலத்தில் நீயும் உன் மக்களும் உலகத்து ஆன்மாக்களும் ஆனந்தம் பெறும் பொருட்டு எமது சிவலிங்கத் திருமேனியை மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் எட்டு திசைகளிலும் காட்சி நிற்போம் என்றார்.

உடனே தன்னுடைய ஞானக் கண்ணிலிருந்தும், அங்கங்களிலிருந்தும் எட்டு வகை லிங்கத் திருமேனிகளைச் சிதறும்படி செய்தார்.

எட்டு லிங்கங்கள்:
திருவள்ளூர் மாவட்ட எல்லையில் எண்திரசக் காவலர்களாக அஷ்டதிக் பாலகர்கள் போல....

அஷ்டதிக் கஜங்களாக எண்வகைத் திருமகள்களைப் போல......

ஐஸ்வர்யம் தரும் அஷ்ட லிங்கங்களாய் இந்த எட்டு லிங்கங்கள் அமர்ந்துவிட்டன.

அநபாயனின் அருட்பணி:
தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்த சோழ மன்னனாகிய அநபாயன், தென்திசையின் சிவனருட் செல்வராக அவதரித்த தெய்வச் சேக்கிழார் பெருமானுடன் ஒரு சமயத்தில் வேதபுரீஸ்வரரை வழிபட்டு சிவனருட் பணியையும் தொடங்கினான்.

இதற்கு அடையாளமாக வேதபுரீஸ்வரர் கருவறைக்குப் பின்னால் சோழ மன்னனையும் சேக்கிழாரையும் தெய்வச் சிலையாக வைத்திருப்பதை இன்றும் கண்டு தரிசிக்கலாம்.

காண்பவர் கண்கள் குளிர்ந்திடவும், நினைப்பவர் நெஞ்சங்களில் தீவினைகள் அகன்று நன்மைகள் பெருகவும், சிவபுண்ணிய பூமியில் கால் பதித்துவிட்டு அஷ்டலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பவர்களுக்கு எட்டு ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது உண்மை.

சம்பந்தர் தேவாரம்:
பண் :பழந்தக்கராகம்

1.🔔ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.

🙏🏾மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

2.🔔ஆட னாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.

🙏🏾ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

3.🔔பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே.

🙏🏾பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

4.🔔ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ் படும்மவர் பாவமே.

🙏🏾ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித் துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

5.🔔காட்டி னாலு மயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை யொல்லையே.

🙏🏾மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.

6.🔔தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.

🙏🏾தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.

7.🔔மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.

🙏🏾வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

8.🔔மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.

🙏🏾மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர், அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

9.🔔பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே.

🙏🏾பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

10.🔔மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாவெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.

🙏🏾ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலாமொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.

11.🔔விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

🙏🏾விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

             திருச்சிற்றம்பலம்.

திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி,
நவராத்திரி,
மார்கழி திருவாதிரை,
பங்குனி உத்திரம்.

தொடர்புக்கு:
044- 26272430
044- 26272487

இதன் அருகில் சமீபத்திய பாடல் பெற்ற திருக்கோயில்கள்:
திருவொற்றியூர்.
திருவலிதாயம்.
திருமுல்லைவாயில்.
திருமயிலை.
திருவான்மியூர்.


தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருமயிலை.(சென்னை.)

______________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

No comments:

Post a Comment