Friday, March 16, 2018

Madurai meenakshi temple and Malik kafur

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
----------------------------------------------------------
*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல....................... .)
*நேற்றைய தொடர்ச்சியின் மீதிப் பதிவு.*
---------------------------------------------------------
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 244*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*

*சிவ தல அருமைகள் பெருமைகள்:*

*🏜மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருஆலவாய் (மதுரை):*
--------------------------------------------------------
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பதினான்கு தலங்களில் இத்தலம் முதலாவதாக போற்றப் படுகிறது.

*🌙இறைவன்:* சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்.

*💥இறைவி:* மீனாட்சி, அங்கயற்கண்ணி.

*🌴தல விருட்சம்:* கடம்ப மரம்.

*🌊தல தீர்த்தம்:* பொற்றாமரைக் குளம், வையைஆறு, எழுகடல்.

*🔥ஆகமம்:* காரணாகம முறைப்படி.

*📔தேவாரம் பாடியவர்கள்:*
திருநாவுக்கரசர். -நான்காம் திருமுறையில் ஒரு பதிகமும், ஆறாம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆக இரண்டு பதிகங்கள்.
திருஞானசம்பந்தர். -முதலாம் திருமுறையில் ஒரு பதிகமும், இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகமும், மூன்றாம் திருமுறையில் ஏழு பதிகங்கள். ஆக மொத்தம் இத்தலத்திற்கு பதினோறு
பதிகங்கள்.

*🛣இருப்பிடம்:*
மதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். கோவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி..மி தொலைவில் உள்ளது.

தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.

*✉அஞ்சல் முகவரி:*
நிர்வாக அதிகாரி
அருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில்,
மதுரை.
PIN - 625 001
---------------------------------------------------------
*மாலிக்பூர் படை:*
மன்னன் பராக்கிரம பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருந்தபோது 1330- வாக்கில், மாலிக்பூரின் படைகள் மதுரை ஊருக்குள் வெறியுடன் நுழைந்தது.

இந்த நேரத்தில் பராக்கிரமம் பாண்டிய மன்னன் காளையார் கோயிலுக்குப் பயணித்திருந்தார்.

ஊருக்குள் நுழைந்து மாலிக் கபூரின் ஐபடைகள் கண்ணுக்குத் தெரிந்த எல்லாத்தையும் சேதிப்படுத்திக் கொண்டே வந்தன.

வழியெங்கும் எதிரே கண்ட மக்களை சிரத்தேசம் செய்தான். மதிப்புமிக்கவைகளைக் கொள்ளையடித்தான். பெண்களை பலாத்காரம் செய்தான். பலரை சிரைபடுத்திக் கொண்டான்.

இவ்வாறு வழியெங்கும் மனிதர்களை துவேசம் செய்து கொண்டே வந்தான். 

பல  கோவில்களை இடித்தான். 
மூர்த்திகளையும் விட்டுவைக்கவில்லை. இடித்தழித்தான்.

மாலிக்கின் அட்டூழியங்களை கேட்டு அறிந்ததும், மீனாட்சியம்மன் கோவிலின் ஐந்து சிவாச்சாரியார்கள் கூடிப் பேசினார்கள்.

எப்படியாவது மாலிக்பூரானிடமிருந்து நம் மூர்த்தியை காப்பாற்றிவிட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டனா்.

நாம் செய்யப் போகும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் எடுத்துக் கொண்டு ரகசியம் காத்தார்கள்.

கடைசியாக சுவாமிக்கு 
விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்து முடித்து வணங்கிக் கொண்டனர்.

மூர்த்தியை மறைத்தவாறு 
கா்ப்பகிரகத்தின் முன் முழு வாயிலையும் மறைத்தவாறு கல்சுவா் கட்டி வா்ணத்தால்
பூசி மெழுகிவிட்டனர்.
 
புது மதிலுக்கு முன்புறம், 
உள்ளே இருக்கும் மூர்த்தத்தைப் போன்றே 
வேறு மூர்த்ததம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்வித்து, அதற்கு விளக்கு, நகை,
மாலைகளை அணிவித்து, மணம் கலங்கி அகழ்ந்து சென்றனர்.

வந்தான் மாலிக். பல ஆயிரம் பேர்களைக் கொண்றான். 
பலரை மதம் மாற்றினான்.

மாட்டிறைச்சியை எல்லோருக்கும் கொடுத்து தின்னச் செய்தான். மதிப்புமிக்க பல
விக்ரகங்களை கொள்ளையிட்டு அபகரித்தெடுத்துக் கொண்டு போனான்.

இங்கு மாலிக்பூரான் அனைத்தையும் நாசம் செய்து சுமார் நாற்பத்தெட்டு வருடங்கள் கழிந்து போனது.

இந்த நாற்பத்தெட்டு வருடங்களும்  சுவாமிக்கு பூஜை இல்லை. புணர்புஷ்காரம் ஏதுமில்லை. கோவிலும் பாழாகி இருந்தது.

அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. இப்பட்டியல் படையெடுத்து வந்தான். முடிவில் முகலாயர்களை துரத்தப்பட்டாா்கள். எல்லா கோவிலையும் புணருத்தாரணம் செய்தார்கள்.

மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கும் புரணமைப்பு 
செய்யும் வேலைகளத் துவக்கினார்கள்.

மதிலின் முன்னே தற்காப்புக்காக வைத்திருந்த சிவலிங்கம் இடிக்கப்பட்டு கிடந்தது. 

எனவே வேறு சிலையை செய்யுங்கள் என்று சாம்ராஜ்ய பிரதிநிதி ஒருவர்  கொண்டிருந்தார்.

அது நேரத்தில்........... 
 தள்ளாத வயது முதிர்ந்த 
சிவாச்சாரியார் ஒருவர் 
உத்தரவிட்டுக்அங்கு வந்தார்.

சாம்ராஜ்ய பிரதிநிதியைப் பார்த்து............புது விக்கிரகமெல்லாம்  செய்ய
வேண்டாம்.... சுவாமி பத்திரமாக இருக்கிறார் 
என்று அவர் கூறினார்.

என்ன சொல்கிறீா்கள்?
இப்படி இடித்து விட்டு போயிருக்கிறாா்களே! சுவாமி வேண்டுமே! என்றனர்.

வேண்டாம் வேண்டாம்!, இடிந்த இந்த விக்கிரகம்
மூல விக்ரஹம் இல்லை என்று கூறி மூல விக்கிரகத்தை பாதுகாத்த விசயத்தை கூறினார்.

என்னுடன் இருந்த நாண்கு பேர்கள் இறந்து போய்விட, நான் ஒருவன் மட்டுமே உயிருடன் இருக்கிறேன். 
காலம் வரும் வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாகவேண்டுமென்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறேன். 
என்று சொல்லி, தாளாத துக்கத்துடன் நடந்த விபரத்தை முழுவதும் கூறினார்,......

மனதில் இருந்த பாரம்  இறங்கிவிட்டிருந்தது அனைத்து சிவாச்சாரியார்க்கு.

சிவாச்சாரியார் ஆலோசனைப்படி, உடனே கல் சுவரை இடித்தாா்கள். முழுவதைம் இடித்து உள்ளே சென்று பார்த்தால்????? 
---------------???
----------??????????????,,,,,,

(சிவ சிவ,,,,!சிவ சிவ,,,,,!இப் 
பதிகத்தை டைப் செய்த
போது என் உடல் சிலிர்த்து 
கண்ணில் நீர் மல்கியது.)
~~~~~~'

உள்ளே... நாற்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத அவ்விடத்தில் விளக்குகள் இரண்டும் எாிந்து கொண்டிருந்தன.

சுவாமியின் மீது சாற்றியிருந்த சந்தன கல்பம் ஈரமாக தன்மையுடனும், சந்தனமனம் குறையாமலும் இருந்தது. 

பூக்கள் இப்ப பூத்தது போலிருந்தது. வாடி உதிர்ந்த பூக்கள் எதுவும் கீழே இருக்கவில்லை.

கா்ப்பகிரகத்தின் உள்ளே இருக்கும் வாசனைக் கற்றைகள் அப்படியே இருந்தன. 

திளைத்தனா் அணைவரும்.
திகைத்தனர் பக்தியில். ஊரே திரன்டது. திருவிழா போன்று கூட்டம் பூன்டது.

புதுப் பொலிவுடன் 
கோயில் புரணமைப்புப் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதன் பின்பு, உடைக்கப்பட்ட சிவலிங்கத்தை
பொற்றாமரைக் குளம் அருகே வைக்கப்பட்டு, இது குறித்து பலகையில் எழுதி வைத்து விட்டனர்.

இங்கு வருவோர் இதை, யாவரும் பாரா முகமாகவே வந்து விட்டுச் சென்றனா். ஒரு சமயம் நம் மாநிலத்தின்
முதல்வர் வந்து பார்க்க...... 
எப்படிப்பட்டது,,,, இது? 
இதை இங்கேயா? வைத்திருப்பது!' கோவிலில்  வையுங்கள் என்றாா்...!

மீண்டும் இதனைப் பற்றி விபரம் எழுதி வையுங்கள் எனச்சொல்லி விட்டுச் சென்றார்.

உடனே, சேதப்படுத்தப்பட்ட லிங்கத் திருமேனியை சுவாமி சண்ணதியில் விபரப்பலகையுடன் வைக்கப்பட்டது. 
*"சிவசிவ, சிவசிவ,*
             
சுவாமியின் கருவறையை இந்திர விமானம், விண்ணிழி விமானம் என்றழைக்கப்படுகிறது.

இக்கருவறையை அஷ்டதிக்கு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு பூதகணங்களும் தாங்கும் அமைப்பில் இவ்விமானம் அமைந்திருந்தது. *சிவ சிவ*

என்னவொரு அமைப்பு? இது. எவ்வளவான கற்பனைகளை நினைத்து, அதில் பலநிலைகளை உள்மனதில் இருத்தி, அதை திருத்தி, அழித்து, அதை மீண்டும் திருத்தி, அழித்து தெளிவித்த நிலை கிடைக்கும் வரை செய்வித்துத்தான் இவ்விமானத்தை உருவாக்கியிருக்க வேண்டும்! *சிவ சிவ.*

இக்கோயிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபம் மிகவும் பெரியது. இம்மண்டப வாயிலின் மேற்புறத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் வரையப்பட்டிருந்தது. இவ்வமைப்பை நாம் வேறு எங்கும் இதுவரை காணப்பெறவில்லை.

இங்குள்ள மண்டபத்தில், பிட்சாடனர் குறவன் குறத்தி முதலிய சிற்ப அழகு மிக்க சிலைகள் தெவிட்டாத கலைச்சுவை கொண்டவை. பார்வையால் இதனழகை சுவைத்துக் கொண்டோம்.

இம்மண்டபத்தில் நின்று எங்கு நோக்கினாலும் இத்தூண்கள் அனைத்தும் ஓர் ஒழுங்கு வரிசையில் இருப்பதைக் கண்டு வியந்து போனோம். *சிவ சிவ*

இங்கு நிருத்த கணபதி, சரஸ்வதி, அர்ச்சுனன், ரதி, மோகினி, மன்மதன், கலிபுருடன் முதலிய பல சிற்பங்களும் காணப்பட்டன.
ரசித்துத் திரும்பினோம்.

இங்கிருந்த நடராஜரின் சிலையும் அற்புதமாக இருந்தது. *சிவ சிவ* மிக மிக அழகாகவும் இருந்தது.

இம்மண்டபத்தில் *"கலைக் காட்சியகம்"* நடத்தப்பட்டு வருகிறார்கள். தெய்வீகத் திருமேனிகளையும், தொல்பொருள்களையும் என அணைத்தையும் இங்கு உள் சென்று கண்டு மகிழந்து வெளிவந்தோம்.

ஆயிரம்கால் மண்டபத்திற்குப் பக்கத்திலேயே மங்கையர்க்கரசியார் பெயரால் புதிய மண்டபமொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இம்மண்டபத்தில் கூன் பாண்டியன், மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தர், குலச்சிறையார் ஆகியோருடைய உருவங்களைக் கண்டோம். கண்ணீர் மல்க நின்று கரம் கூப்பி வணங்கிக் கொண்டோம். *சிவ சிவ*

சிவலிங்கத் திருமேனி ஒன்றையும் நடுவில் நிறுவியிலுள்ளார்கள். கண்டதும் கைகள் கூப்பிய நிலைக்குச் சென்றன. *சிவ சிவ*

இதனையொட்டி மருதுபாண்டியர் கட்டிய சேர்வைக்காரர் மண்டபமும், அழகிய மரவிதானங் கொண்ட கல்யாண மண்டபமும் இருந்தன. முழுமையாகக் கண்டு மகிழ்ந்தோம் வியந்தோம்.

சுவாமி அம்பாள் புறப்பாடும் நிகழும் தெருவை *'ஆடிவீதி'* எனப்படுகிறது. வடக்கு ஆடிவீதியில் இருக்கும் பெரிய கோபுரத்தையடுத்து ஐந்து இசைத்தூண்கள் இருந்தன.

இதிலிருக்கும் ஒவ்வொரு தூணிலும் இருபத்திரண்டு துணைச் சிறுதூண்கள் இருந்தன. இவைகளைத் தொட்டு கைகளினாலேயே தட்டினோம்.

ஒவ்வொரு துணைச் சிறுதூண்களிலிருந்தும் ஒவ்வொருவித விதமான இனிய ஓசை நம் செவிக்கு வந்து இனித்தது.

இசைத்தூண்களின் அமைப்பு அதிசயமானவை. இதில் எழும் ஒலிகள் அதிசயத்திலும் அதிசயமானவை. *சிவ சிவ*

கிழக்குக் கோபுரத்திற்கு எதிரில் வசந்த மண்டபம் இருந்தது. இம்மண்டபத்திலிருந்தவாறுகிழக்குக் கோபுரத்தைக் கண்டு *சிவ சிவ* என வணங்கிக் கொண்டோம்.

இந்த வசந்த மண்டபத்தைத்தான் புது மண்டபம் என்பர்.
இதை திருமலை நாயக்கர் கட்டியது.

இதில் தடாதகைப் பிராட்டியார், மீனாட்சி திருமணம், திருமலை நாயக்கர், கல்யானை கரும்பு தின்னுவது, இராவணன் கயிலையைத் தூக்குவது, முதலிய பல சிற்பங்கள் இருந்தன. அதிசயித்து ரசித்தோம்.

இதுவரை, ரசிக்க வேண்டியவைகளைப் பார்த்தும், வணங்க வேண்டியவைகளைக் கண்டும், ஓய்ந்து போனோம். காரணம் இத்தலத்தை முழுமையாக பார்க்க தரிசிக்க ஓரிருநாள் போதாது.

இத்தலம் செல்வோர்கள், நாட்களை கூடுதாலாக கணக்கிட்டுப் புறப்பட்டுப் போய் தரிசித்துத் திரும்புங்கள்.

புதுமண்டபத்தின் எதிரே ராயகோபுரம் முடிவு பெறாத நிலையில் இருந்ததைக் பார்த்தோம். (இது எப்படியான நிலையில் இன்று உள்ளதோ நாம் அறியவில்லை.)

மதுரை செல்வோர் அனைவரும் திருமலை நாயக்கர மகாலைக் கண்டு, மகிழ்ந்து திரும்புங்கள். திருமலை நாயக்கர் தம் தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றியபோது இதைக் கட்டியதாக செய்தி. 

செங்கல், வெண்சுதைசாந்து ஆகியவற்றைக் கொண்டே (மரம் இரும்பு, ராடுகள் இவற்றின் துணையின்றிக் கட்டப்பட்டுள்ளது இம்மஹால்.) பெரும் அழகு வேலைப்பாடுகளைக் கொண்டவை. இங்கு பல இடங்களில் நின்று நம்மை புகைப்படமெடுக்கச் செய்து கொண்டோம். (ஆலயத்துக்குள் எங்கும், நாம் புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை.)

ஞானசம்பந்தர் காலத்தில் சுவாமி கோயில் மட்டுமே இருந்ததாகத் தெரிகின்றது.

மதுரையை ஆண்ட சடையவர்மன் என்ற குலசேகரபாண்டியன் பன்னிரண்டாம் நூற்றாண்டில் மீனாட்சியம்மைக்குத் தனிக்கோயில் எடுப்பித்தான் என்று தெரிகிறது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் மாறவர்மன்  சுந்தரபாண்டியன் கீழ்க்கோபுரத்தைக் கட்டிச் சுற்று மதில்களை அமைத்திருந்தான்.

பதினான்காம்​ நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் மேற்குக் கோபுரம் கட்டப்பட்டது.

பதினாறாம் நூற்றாண்டில் செவ்வந்திச் செட்டியார் தெற்குக் கோபுரத்தைக் கட்டினார்.

ஆயிரம் கால் மண்டபத்தை அரியநாத முதலியார் அமைத்தார்.

பதினேழாம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலைநாய்க்கர் காலத்தில் புதுமண்டபம், அஷ்டசக்தி மண்டபம் கிளிக்கூட்டு மண்டபம் முதலியன கட்டப்பட்டன.

ஆடிவீதிகளில் உள்ள சுற்று மண்டபங்கள் இராணி மங்கம்மாள் அவர்களால் கட்டப்பட்டன.
                  *சிவ சிவ.*

*நாவுக்கரசர் தேவாரம்:*
1.🔔முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தால் துவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய் , செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய் , அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய் , தூய முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான் பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம் .

2.🔔விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை
மேலாடு புரமூன்றும் பொடிசெய் தானைப்
பண்ணிலவு பைம்பொழில்சூழ் பழனத் தானைப்
பசும்பொன்னின் நிறத்தானைப் பால்நீற் றானை
உண்ணிலவு சடைக்கற்றைக் கங்கை யாளைக்
கரந்துமையோ டுடனாகி யிருந்தான் தன்னைத்
தெண்ணிலவு தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய் , வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய் , வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய் , பசும் பொன்நிறத்தனாய் , வெண்ணீறு அணிந்தவனாய் , சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய் , உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென் கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

3.🔔நீர்த்திரளை நீள்சடைமேல் நிறைவித் தானை
நிலமருவி நீரோடக் கண்டான் தன்னைப்
பாற்றிரளைப் பயின்றாட வல்லான் தன்னைப்
பகைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தான் தன்னைக்
காற்றிரளாய் மேகத்தி னுள்ளே நின்று
கடுங்குரலா யிடிப்பானைக் கண்ணோர் நெற்றித்
தீத்திரளைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய் , பின் பகீரதன் பொருட்டாக அதன் ஒரு பகுதியை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய் , பால் , தயிர் , நெய் என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய் , பகை கொண்டு வந்த கொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய் , காற்றின் திரட்சியாய் மேகத்தின் உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய் , நெற்றியின் கண் தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

4.🔔வானமிது வெல்லா முடையான் தன்னை
வரியரவக் கச்சானை வன்பேய் சூழக்
கானமதில் நடமாட வல்லான் தன்னைக்
கடைக்கண்ணால் மங்கையையு நோக்கா வென்மேல்
ஊனமது வெல்லா மொழித்தான் தன்னை
யுணர்வாகி யடியேன துள்ளே நின்ற
தேனமுதைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய் , தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய் , அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

5.🔔ஊரானை யுலகேழாய் நின்றான் தன்னை
யொற்றைவெண் பிறையானை யுமையோ டென்றும்
பேரானைப் பிறர்க்கென்று மரியான் தன்னைப்
பிணக்காட்டில் நடமாடல் பேயோ டென்றும்
ஆரானை அமரர்களுக் கமுதீந் தானை
அருமறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏கயிலை மலையை இருப்பிடமாக உடையவனாய் , ஏழுலகமும் பரந்து இருப்பவனாய் , ஒற்றைப்பிறையை அணிந்தவனாய் , உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய் , அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய் , பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய் , தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய் , வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

6.🔔மூவனை மூர்த்தியை மூவா மேனி
யுடையானை மூவுலகுந் தானே யெங்கும்
பாவனைப் பாவ மறுப்பான் தன்னைப்
படியெழுத லாகாத மங்கை யோடு
மேவனை விண்ணோர் நடுங்கக் கண்டு
விரிகடலின் நஞ்சுண் டமுத மீந்த
தேவனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏யாவரினும் முற்பட்டவனாய் , அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய் , என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய் , தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய் , அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய் , ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பி யிருப்பவனாய் , தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்த தேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே .

7.🔔துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் தன்னை
இறந்தார்க ளென்பே யணிந்தான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னை
மறந்தார் மதில்மூன்றும் மாய்த்தான் தன்னை
மற்றொருபற் றில்லா அடியேற் கென்றும்
சிறந்தானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய் , அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ளவல்லவனாய் , இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய் , இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய் , வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

8.🔔வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை யேற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றும்
சேயானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி , அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய் , மாசற்றவனாய் , கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய் , பிறையைச் சடையில் சூடியவனாய் , தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

9.🔔பகைச்சுடராய்ப் பாவ மறுப்பான் தன்னைப்
பழியிலியாய் நஞ்சுண் டமுதீந் தானை
வகைச்சுடராய் வல்லசுரர் புரமட் டானை
வளைவிலியா யெல்லார்க்கு மருள்செய் வானை
மிகைச்சுடரை விண்ணவர்கண் மேலப் பாலை
மேலாய தேவாதி தேவர்க் கென்றும்
திகைச்சுடரைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய் , அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டு தேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடைய மும்மதில்களையும் அழித்தவனாய் , நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய் , மேலான ஒளிவடிவினனாய் , விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய் , மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

10.🔔மலையானை மாமேரு மன்னி னானை
வளர்புன் சடையானை வானோர் தங்கள்
தலையானை யென்தலையி னுச்சி யென்றுந்
தாபித் திருந்தானைத் தானே யெங்கும்
துலையாக வொருவரையு மில்லா தானைத்
தோன்றாதார் மதில்மூன்றுந் துவள எய்த
சிலையானைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

🙏கயிலை மலையை உடையவனாய் , மேரு மலையில் தங்கியிருப்பவனாய் , வளர்ந்த செஞ்சடையினனாய் , வானோருள் மேம்பட்டவனாய் , என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய் , எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

11.🔔தூர்த்தனைத் தோள்முடிபத் திறுத்தான் தன்னைத்
தொன்னரம்பின் இன்னிசைகேட் டருள்செய் தானைப்
பார்த்தனைப் பணிகண்டு பரிந்தான் தன்னைப்
பரிந்தவற்குப் பாசுபதம் ஈந்தான் தன்னை
ஆத்தனை யடியேனுக் கன்பன் தன்னை
யளவிலாப் பல்லூழி கண்டு நின்ற
தீர்த்தனைத் தென்கூடல் திருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
 
                  திருச்சிற்றம்பலம்.

🙏பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய் , பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய் அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய் , நம்பத்தகுந்தவனாய் , அடியேன் மாட்டு அன்பு உடையவனாய் , அளவற்ற பல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே .

          திருச்சிற்றம்பலம்.

*🎡திருவிழாக்கள்:*
சித்திரா பௌர்ணமி அன்று அழகர் வைகையாற்றில் வந்து இறங்கும் திருவிழா இத்தலத்து சிறப்பான திருவிழா.

தமிழ்மாதம் முதல்நாளில் தங்கரதம் புறப்படுதல்.

மாதாந்திர விழாக்கள்.
பிட்டுத் திருவிழா.

ஆவணிமூல திருவிழா.

*☎தொடர்புக்கு​:*
இணை ஆணயர், செயல் அலுவலர்.
0452- 2344360
0452- 2349868

*📣 அருகில்​ உள்ள பாடல் பெற்ற தலங்கள்:*
மதுரையிலிருந்து தொலைவுகள்..........................
திருஏடகம்...................14.கி.மி.
திருப்பரங்குன்றம்....07.கி.மி.
திருச்சுழியல்.............43.கி.மி.
திருப்பூவணம்...........18.கி.மி.
திருஆப்பனூர்...........02.கி.மி.

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *அருள்மிகு ஆப்புடையார் திருக்கோயில், திருஆப்பனூர்.*
-------------------------------------------------------
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளகருக்கிறான்.*

No comments:

Post a Comment